டாக்டர் வா.செ. குழந்தைசாமி
மனித சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் மொழிகட்கு ஒலிகள்தான் அடிப்படை. ஒலிகள் நிரந்தரமானவை. நீண்ட இடைவெளிகட்கிடையில் சிறு மாற்றங்கள் ஏற்படலாம். வரிவடிவம் ஒலிக்கு நாம் பயன்படுத்தும் குறியீடுகள், வரிவடிவம் காலத்துக்கேற்ப மாறக்கூடியது. எழுது பொருள், எழுதுகருவிக்கேற்ப மாறியே வந்திருக்கிறது. இன்று நமது சுருக்கெழுத்தாளர்கள் பயன்படுத்தும் வரிவடிவமும் தமிழ்தான். வரிவடிவத்தால் மொழி மாறுவதில்லை. தமிழ் வரிவடித்தில் கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதல் ஏற்பட்ட மாற்றங்களைப் படம் 1 - இல் காணலாம்.
ஒரு மொழிக்கு உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்பவைதான் அடிப்படை. தொல்காப்பியமும்
“எழுத்தெனப் படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப”
என்றே கூறுகிறது. ஐரோப்பிய மொழிகளில் உயிர்மெய் எழுத்துகள் இல்லை, மத்திய ஆசிய மொழிகளிலும் உயிர்மெய்க் குறியீடுகள் மட்டும் உள்ளன. இந்திய மொழிகளில் தான் உயிர்மெய் எழுத்துகட்குத் தனி வரிவடிவம் உள்ளது.

மற்ற ஏழு உயிர்மெய் வரிசைகட்குப் பயன்படுத்துவது போல இந்த நான்கு வரிசைகட்கும் நான்கு குறியீடுகளைப் பயன்படுத்தினால், 72 - குறியீடுகள் என்பது நான்காகக் குறைந்துவிடும். அப்பொழுது 216 உயிர் மெய் எழுத்துகட்குத் தேவைப்படுவன 8 குறியீடுகள் மட்டும்தான். தமிழ் எழுத்துகள் 247 - க்கும் தேவைப்படுவன [31+8] என 39 குறியீடுகள்தான்.

நாம் இதுவரை பரிந்துரைத்துள்ள சீர்திருத்தம் ஏற்கப்பட்டால் தமிழ் நெடுங்கணக்கின் 247 எழுத்துகள் முழுவதையும் எழுதக் குழந்தைகள் கற்க வேண்டியன அட்டவணை 6 - இல் கொடுக்கப்பட்டுள்ள 39 குறியீடுகள் மட்டுமே. இங்கு புதுமையானதோ, புரட்சிகரமானதோ எதுவுமில்லை. ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்கு முன் பெரியார் அவர்கள் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அமைந்தது தான் இந்த வரிவடிவச் சீர்திருத்தம். நாம் செய்ய வேண்டிய மாற்றம் ஆலின் விதை போன்றது: ஆனால் அதன் பயன் உண்மையிலேயே ஆல்போன்றது.
தமிழ் ஒரு மாநில மொழி மட்டுமன்று. உலகு தழுவி 60 - க்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் ‘குவலயக் குடும்பத்தின்’ மொழி. எளிய வரிவடிவத்தைக் கொண்ட 26 எழுத்துகளில் ஆங்கிலத்தைக் கற்கும் இளைஞர்கள் 247 எழுத்துகளைக் கொண்ட வரிவடித்தைப் பார்த்து மருண்டு நிற்கிறார்கள். அவர்கட்கு வழிமறைக்கும் நந்தியாக வரிவடிவம் நிற்கிறது. தமிழகத்திலும் 39 குறியீடுகளில் எழுதக் கூடிய மொழியைக் கற்க, 107 குறியீடுகளை ஒவ்வொரு ஆண்டும், தலைமுறை தலைமுறையாக இலட்சக் கணக்கான குழந்தைகளைக் கற்க வைப்பது காலத்துக் கேற்ற செயல் அன்று. காலத்தின் அருமை அறிந்த செயல் அன்று. நாம் வாழ்வது அறிவுயுகம். விரைவே வெற்றியின் பாதை என்பது இன்றைய வேதம். நாம் வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.
நாம் கூறும் வரிவடிவச் சீரமைப்பை எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்களில் முக்கியமானவை இரண்டு:
1. நாம் தமிழ் வரிவடிவத்தைச் சிதைக்கிறோம்
2. தற்பொழுது இருக்கும் வரிவடித்தில் உள்ள நூல்களைப் படிப்பது கடினம்: அவற்றை இழந்து விடுவோம்.
முதலாவதாக வரிவடித்தைச் சிதைக்கிறோம் என்பதை எடுத்துக் கொள்வோம். உண்மையில் ‘அகர’ முதல் ‘னகரம்’ வரை உள்ள 30 எழுத்துகளில் எதன் வடிவத்தையும் நாம் எந்த விதத்திலும், அணுஅளவும் மாற்றவில்லை. உயிர்மெய் வரிசையில் தனியாக மற்ற எழுத்துகட்கு இருப்பது போலவே இகர, உகர வரிசைகட்கும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் தற்பொழுது உள்ள வழக்கில் குறிப்பாக உகர, ஊகார வரிசைகளில் 36 உயிர்மெய் எழுத்துகளையும், அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைத்து விடுகிறார்கள்.
இரண்டாவதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் வழக்கிழந்துவிடும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இன்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வரிவடித்தில் எழுதப்பட்ட திருக்குறள், 2000 ஆண்டுகட்கு முன்பிருந்து பனை ஓலைகளில் ஏறத்தாழ 100 ஆண்டுகட்கு ஒரு முறை மாற்றி எழுதப்பட்டு, எதுவும் கூடாது குறையாது நம்மை அடைந்திருக்கிறது. இன்றைய நிலைமை முற்றிலும் வேறு. தொல்காப்பியம் முதல் கம்பராமாயணம் வரையிலுள்ள காலப்பகுதியில் எல்லா நூல்களும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையத்தில் இருக்கின்றன. இடைக்கால இலக்கியங்களில் முக்கியமானவை 20-ஆம் நூற்றாண்டில் முக்கியமானவை, இணையத்தில் இடம் பெற்றுள்ளன. மென்பொருளில் செய்யும் ஒரு சிறு மாற்றத்தின் மூலம் இவையனைத்தையும் புதிய வரிவடித்தில் பதிப்பித்துவிடலாம். மேலும் இந்த மாற்றம் ஏதோ இரண்டொரு நாளில் நடந்துவிடுவது அன்று. படிப்படியாகக் குறைந்தது பத்தாண்டுகள் இரண்டு வரிவடிவங்களும் பயன்பாட்டில் இருக்கும். எனவே பழைய இலக்கியங்கள் வழக்கொழிந்துவிடும் என அஞ்சுவது தேவையில்லை. எந்தத் துறையில் மாற்றமானாலும் அதைச் செய்வதற்கும் இலக்கணம் இருக்கிறது, வழிமுறை இருக்கிறது. நாம் வரிவடித்தில் முன்பும் ஒருமுறை மாற்றம் செய்தோம். நாணயங்களில், நீள, அகலம் போன்ற அளவைகளில் நாம் மாற்றம் செய்தோம். எதையும் ஒரு நாளில் அல்லது ஒரு ஆண்டில் செய்து விடவில்லை.
எழுத்துச்சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சியாகக் காண
http://www.tamilvu.org/esvck/index.htm
http://www.tamilvu.org/esvck/index.htm
No comments:
Post a Comment